ஞாயிறு, 12 டிசம்பர், 2010

மீனவ‌னின் உரிமைக‌ளைப் ப‌றிக்கும் க‌ருப்பு ச‌ட்ட‌ம்!
கடற்கரை ஒழுங்கமைவு மண்டல அறிக்கை 2010

ஜோ.த‌மிழ்ச்செல்வ‌ன்
      கடற்கரை ஒழுங்கமைவு மண்டல அறிக்கை - 1991 சரியில்லையென கருதிய அரசாங்கம் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் கடற்கரை மேலாண்மை மண்டல அறிக்கை - 2008ஐ தொடர்ந்து கடல் மீன்பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை அறிக்கை - 2009 வெளியிட்டது. இந்த அறிக்கை சுதேசி மீனவர்களின் நலனுக்கு முற்றிலும் விரோதமாக இருந்ததால் ஒட்டுமொத்த இந்திய மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில் இன்னொரு குழந்தையை பெற்றெடுக்க அரசு முயற்சி செய்தது. 19 வருட காலமாக வளர்க்கப்பட்டு அறிவு புகட்டப்பட்டு வடிவம் கொடுக்கப்பட்டு பெற்றெடுக்கப்போகும் குழந்தையின் பெயர், ''கடற்கரை ஒழுங்கமைவு மண்டல அறிக்கை - 2010''. இந்த குழந்தையாவது நல்ல குழந்தையாக இருக்குமெனப் பார்த்தால் இது அந்நிய நிறுவன முதலாளிகளுக்குப் பிறந்த கள்ளக்காதலியின் குழந்தையாக இருக்கிறது. இந்த குழந்தையை பெற்றெடுக்கத் துடிக்கின்ற தாயின் பெயர், ''சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்''.
      இவ்வறிக்கையை தயார் செய்தவர்கள், மக்கள் முன்வைத்த கருத்துக்களின் அடிப்படையிலும், நீதிமன்றம் முன்வைத்த கருத்துக்களின் அடிப்படையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதெனச் சொல்லுவது முற்றிலும் பொய். இவர்கள் மீனவர்களா அல்லது கடற்கரையில் நின்றுகொண்டு தனது வெளிதேசக் காதலிகளோடு கொஞ்சிக் குலாவுகின்ற கலாச்சார சீர்கேடுவாதிகளா அல்லது வாடகைக்கு அறையெடுத்து மது மாது போதை மயக்கத்தில் கும்மாளமிட்டு மதிமயங்கிய இரவுநேர வியபாரிகளா அல்லது பணம் வாங்கிக்கொண்டு அந்நிய நிறுவனங்களுக்கு நமது பாரத தேசத்தை தாரைவார்க்கும் எட்டப்பர்களா என்பதனை இவ்வறிக்கையை ஆய்வு செய்கின்றவர்களுக்கு மிக எளிதில் புரிந்துவிடும்; தெரிந்துவிடும்.
      இந்திய கடற்கரை 7500 கி.மீ. நீளத்தைக் கொண்டது. இந்திய மக்கள் தொகையில் 25% மக்கள் கடலை நம்பி வாழ்கிறார்கள். இவர்களுக்கு அருகாமையில் வாழுகின்ற 25% மக்கள் இவர்கள் கொண்டுவருகின்ற மீனை நம்பி வாழ்கின்றனர். இவ்வளவு மக்கள் வாழுகின்ற வாழ்வாதார பகுதிகளை சீரழிக்க ஒரு கூட்டம் முயலுகிறதென்றால் அவர்கள் யார்? கடலிலும் கடற்கரையிலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அமைச்சகம் வியபார உத்திகளை உள்ளேபுகுத்தி சுற்றுச்சூழலைப் பாதிக்கின்ற வகையில் ஒரு அறிவிப்பாணையை கொண்டு வருகிறதென்றால் இவர்கள் அந்நிய நாட்டு கைகூலிகள்தானே? இதன்மூலம் கடலும் கடல் சார்ந்த பகுதியும் மீனவனுக்குச் சொந்தம் என்கிற சித்தாந்தமும் பழக்கவழக்கமுறைச் சட்டமும் காணாமல்போய் விடுகிறது. நினைக்கின்றபோது உள்ளம் நொறுங்கி விடுகிறது; பலகோடி மீனவ மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடுகிறது. இந்த அறிவிப்பாணையை கொண்டு வருபவர்களுக்கு தூரப்பார்வைக்கான ஞானம் இருக்கிறதா என்ற ஐயப்பாடும் எழுகிறது.
கடற்கரைப்பகுதியில் மாசுபடாத தொழிற்சாலைகள், அணுமின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள், சேவைத் தொழில்கள், பசுமை ஓடுபாதை விமானத்தளம் அமைக்கலாம் என அறிவிப்பாணை கூறுகிறது. மாசுபடாத தொழிற்சாலைகளை உலகில் எங்கும் இல்லாதபோது அரசு எதை மாசுபடாத தொழிற்சாலையென குறிப்பிடுகிறதென்பதனைக் குறித்து இவ்வறிவிப்பாணையில் எதுவும் சொல்லவில்லை. சிறப்பு பொருளாதார மண்டலம் என்கிற பெயரில் மக்களின் வாழ்வாதார பகுதிகளை ஆக்கிரமித்ததால் இந்திய குடிமக்கள் மாவோயிஸ்டுகளாக மாறிய வரலாறுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்பொழுது சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு கடலோர பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுமென்பது மீனவர்களையும் மாவோயிஸ்டுகளாக மாற்றுவதற்கு வழிவகுக்கும். இந்தியா ஸ்திரமற்ற நிலையை அடையும்.
செர்நோபிலில் நடந்த விபத்தினைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் கடற்கரையில் அணுஉலைகள் அமைப்பதற்கான கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் கடலோர மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது மட்டுமின்றி அவர்களின் கண்கள் உடனடியாக குத்தி குருடாக்குவதுபோன்று வாழ்வுநிலை மாற்றப்பட்டுள்ளது. அணுஉலைகள் இயங்கும்போது அதிலிருந்து வெளியேறும் அதிகபட்ச வெந்நீரை உடனடியாக குளிர வைக்கவோ அல்லது வெளியேற்றவோ செய்ய வேண்டும். அதனைக் கடலில் வெளியேற்றும்போது கடல்வாழ் உயிரனங்கள் செத்து மிதக்கின்ற சூழ்நிலைகள் உருவாகும். கடலுக்குள் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டி குளிரவைத்தால் கடலின் அளவும் தனித்தன்மையும் மாறும்; கடல் மாசுபடும். வாழ்வாதாரமின்றி மீனவர்கள் கட்டாய இடம்பெயர்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள். வறுமையும் பட்டினிச்சாவும் வழிந்தோடும்.
      தற்பொழுது கூடங்குளம் அணுஉலையிலிருந்து பத்து கி.மீ. தூரத்திற்குள் மீன்பிடிக்கக் கூடாதென சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அப்பகுதியில் மீனவர்கள் நடமாடுவதற்கும் தொழில் கலங்களை வைப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அணுஉலையைத் தகர்ப்பதற்கான ஆயுதங்கள் எதுவும் வைத்திருக்கிறார்களோ என்ற பார்வையில் கடலில் மீன்பிடிப்பவர்களின் கலங்கள் சந்தேகத்துடனே பார்க்கப்படுகிறது. எதிரி நாட்டு குடிமகன்கள் போன்று பார்க்கப்பட்டு அங்கிருந்து விரட்டியடிக்கப்படுகிறார்கள். சைனாவும் பாகிஸ்தானும் நமக்கு எதிரி நாடுகள் ஆகிவிட்டதாலும் சைனா அவர்களது ஆயுத தளவாடங்களை இலங்கையில் நிறுவி வருவதாலும் வெகு எளிதில் கடற்ரையில் இயங்குகின்ற அணுஉலைகளை தகர்க்க முடியும். அப்படி தகர்க்கும்போது அதனைச்சுற்றி இருக்கின்ற மூன்று மாவட்ட மக்கள் உடனடியாக மாய்ந்து போவார்கள். இதன்மூலம் ஒரு ஆபத்தான சூழ்நிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தற்பொழுது இச்சட்டம் கடற்கரை கிராமங்களுக்கிடையில் குடியிருப்பின்றி வெறுமையாக கிடக்கின்ற நிலப்பகுதிகளில் இதனை தொடர்ந்து நிறுவ அனுமதியளிக்கிறது.
     மரபுசாரா எரிசக்திமூலம் மின்உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள் கட்டுவதற்கு பிரிவு 3(1)(டி) வழிவகுக்கிறது. மின்சாரம் மிகப்பெரிய தேவையாக இருப்பினும் இந்தவகை மின்சாரம் தயாரிப்பதற்கு செலவிடப்படும் தொகைக்கு இதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் ஈடு இணையாக இருக்கபோவதில்லை. சுனாமிக்கு பின்பு கடல் கொந்தளிப்பதும் அமைதியாவதும் உள்வாங்குவதும் என பல மாற்றங்கள் நிகழ்ந்து வருவதால் இவ்வகை மின்சாரம் சாத்தியப்பட போவதில்லை. பலமைல் தூரத்திற்கு  கடற்கரைப்பகுதிகளை ஆக்கிரமித்து கட்டும்போது அப்பகுதியில் நடமாடுவதற்கும் மீன்பிடிப்பதற்கும் தடைசெய்யப்படும். மீனவர்களின் குடியிருப்புகளை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்படவேண்டிய சூழ்நிலை ஏற்படும். கரமடி தொழில், கரையில் நின்று தூண்டில் போடுவது, சிப்பி பறக்குவது, சங்கு குழிப்பது, தோடு எடுப்பது போன்ற தொழில்கள் காணாமல் போகும். இதனால் காலங்காலமாக அனுபவித்து வந்த கடலும் கடல் சார்ந்த பகுதியை மீனவர்கள் அனுபவிக்க முடியாத சூழ்நிலை உருவாகும். மீனவர்கள் அப்பகுதியில் படகுகளையோ கட்டுமரங்களையோ கொண்டு செல்வது, கரையில் ஏற்றி வைப்பது முற்றிலும் தடை செய்யப்படும்.
      பிரிவு 4(2)(சி)படி இவ்றிவிப்பாணையானது கப்பல் கட்டும் துறைமுகங்கள், சரக்கு முனையங்கள், கடற்கரையில் மேடைகள், கப்பல் பணிமனைகளின் சாய்தளங்கள் போன்றவற்றைக் கட்டுவதற்கு வழிவகுக்கிறது. கப்பலில் உள்ள கழிவுகளை கடலில் கொட்டுவதால் கடல் மாசுபட்டு வருகிறது. அதிலிருந்து வெளியேற்றப்படுகின்ற எண்ணெய் கழிவானது கடலை அதிகளவு மாசுபடுத்துகிறது. கப்பல் கட்டும் துறைமுகத்தால் கோவாவின் தென்தாலுகாவில் இருக்கின்ற கேனாகோனா பகுதி மிகப்பெரிய மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. அதைப்போன்று இந்தியன் படைப்பிரிவு, ''கடல்புறா திட்டம்'' என்ற மோசமான செயல்திட்டத்தை தென்கார்வாரில் செய்து வருகிறது. குஜராத்தில் புதிய துறைமுகம் கட்டும் பெயரில் அலையாத்திக் காடுகள் முற்றிலும் அளிக்கப்பட்டது. தனியாருக்கு துறைமுகம் கட்டுவதற்கு அனுமதியளித்த அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் அவர்களின் செயல்களைக் கண்காணிப்பதேயில்லை.
     
      துறைமுகம் கட்டும் நோக்கத்தில் அங்குள்ள மக்களுக்கு வேலை தருகிறோம் என்று ஆசை வார்த்தைகள் கூறியும், அதற்கு சம்மதிக்காதவர்களை காவல்துறையினரின் உதவியுடன் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதை அரசு கண்டுகொள்வதேயில்லை. சில இடங்களில் மீனவர்களின் குடியிருப்புகளை அரசே வலுக்கட்டாயமாக அகற்றி அவர்களுடைய விட்டுமனைப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சிறுதொகையை கொடுத்து அப்புறப்படுத்தியது. இவ்வறிப்பாணை அமலுக்கு வந்தால் மனித உரிமைக்கு எதிராக அரசியல்வாதிகளாலும் தனியார் நிறுவனங்களாலும் இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனம் தொடர்ந்து அரங்கேற்றப்படும்.
     தற்போதைய அரசின் முழு நோக்கமும் தாரக மந்திரமும் என்னவென்றால் எல்லாவற்றையும் அந்நிய நாட்டு  நிறுவனங்களுக்கும் தனியாருக்கும் தாரை வார்க்கவேண்டுமென்பதாகும். நமது இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் வேலைக்கு கைகட்டி நின்றதுபோன்று நமது நாட்டினை அந்நிய நிறுவனங்களுக்கும் தனியாருக்கும் தாரைவார்த்து அவர்களிடம் கையேந்தும் நிலைக்கு நம்மைக்கொண்டு செல்கின்றனர். இதன்மூலம் நமது சுதந்திர நாட்டிலே நாம் மீண்டும் அகதியாகவும் அடிமையாகவும் வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். 
      வளர்ச்சி என்றால் என்னவென்று நாட்டை ஆளுகின்ற அரசியல்வாதிகளுக்கு புரிவதில்லை. முதலாவதாக வளர்ச்சி என்பது நீடித்திருக்கத்தக்க வளர்ச்சியாக இருக்க வேண்டும். இரண்டாவதாக வளர்ச்சி என்பது விளிம்பு நிலையில் வாழ்கின்ற மக்களை மேம்பட்ட நிலைக்கு அழைத்து செல்வதாக இருக்க வேண்டும். நமது அரசாங்கம் கடலை நம்பி வாழ்கின்ற ஒட்டுமொத்த மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல் ஒரு குறிப்பிட்ட அந்நிய முதலாளிகளின் வளர்ச்சியையே கருத்தில் கொள்கிறது. அரசு புதிதாகக் கொண்டுவருகின்ற இந்த அறிவிப்பாணை மீனவர்களை வறுமையிலும் ஏழ்மையிலும் வாழவே அழைக்கிறது. அவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த வேண்டிய அரசானது அவர்களை உயிருடன் குழிதோண்டி புதைக்கவே முற்படுகிறது.
     இவ்வறிவிப்பாணை கடற்கரைகளில் சுற்றுலா தளங்கள் அமைப்பதற்கு பரிந்துரைக்கிறது. இது சுற்றுச்சூழலை மிக அதிகமாக பாதிக்கும். மணல் குன்றுகளை முற்றிலும் அழித்து தரைமட்டமாக்கும். தாழ்வு பகுதிகளை குப்பை கொட்டும் இடங்களாக மாற்றிப்போடும். கடற்கரையிலுள்ள அலையாத்தி மரங்களையும் பனை மரங்களையும் தென்னை மரங்களையும் அழித்துபோடும். கடற்கரையில் மிகப்பெரிய கட்டடங்கள் எழும்பும். கடலோர விவசாயம் முற்றிலும் அழிக்கப்பட்டு அவ்விடத்தில் வாடகை விடுதிகள், மதுபார்கள் கட்டப்பட்டு கள்ளக்காதலை ஊக்குவிக்கும். தங்கள் பிள்ளைகள் கெட்டுப்போனதை நினைத்துநினைத்து  பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள். மோசமான கலாச்சார சீர்கேடுகளைக் கொண்டுவரும். இவைகளால் எவருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்காது; நன்மையும் பயிக்காது. விடுதிகளில் இலைபோடுவதற்கும் பார்களில் ஊற்றிக்கொடுப்பதற்கும் தெருக்களை சுத்தப்படுத்துவதற்கான வேலை மட்டுமே இருக்கும்.
     இதில் மிகமிக முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படுவது என்னவென்றால் இந்தியாவின் முதுகெலும்பாக சொல்லப்படுகின்ற இந்திய அரசியல் சட்ட சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படையுரிமை வாழும்உரிமை குறித்து எங்கும் எதுவும் சொல்லப்படவில்லை. மக்களின் கருத்துக்கள் பரீசீலிக்கப்பட்டதாக சொல்லும் இந்த அறிவிப்பாணை எந்தவொரு கருத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே முற்றிலும் மறுக்கமுடியாத உண்மை.
      மும்பை, நவி மும்பை, கோவா ஆகிய நகரங்களில் கட்டமைப்புகள் கட்டுவதற்கும் சாலைகள் அமைப்பதற்கும் கடற்கரையோரமுள்ள அலையாத்தி காடுகள் வெட்டி சாய்க்கப்பட்டது. இதற்கு மும்பை உயர்நீதிமன்றம் (ரிட் மனு 3246/2003) கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. தற்பொழுது சுரங்க ரயில்பாதை திட்டத்திற்கும் நவிமும்பையில் ஆகாயவிமானத்தளம் கட்டவும் அனுமதியளித்துள்ளது. இதன்மூலம் மீனவர்கள் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களுடைய இருப்பிடங்களை அகற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதைப்போன்று எல்லா கடற்கரையோரங்களிலும் கட்டுவதற்கு இவ்வறிப்பாணை அனுமதியளிக்கிறது. மேலும் தற்காப்பு மற்றும் பாதுகாப்புக்காக ஹெலிகாப்டர் இறங்குதளம் கட்டமைப்புகளை கட்டவும் வழிவகை செய்கிறது.
கடற்கரையில் காவல் நிலையம் அமைப்பது குறித்து இவ்வறிவிப்பாணை பேசுகிறது. அந்நிய கப்பல்களை கடலில் மீன்பிடிப்பதற்கு அனுமதியளித்துவிட்டு கடற்கரையில் காவல் நிலையம் அமைப்பதன் அவசியமென்ன? கடலை நம்பி சிதந்திரமாக வாழ்ந்த மீனவன் கடல் ஓட்டத்தில் அல்லது சூறாவளிக்காற்றில் வழிதவறி எல்லைக்கோட்டை தாண்டினால் அவனை கைதுசெய்து சிறையிலடைத்து தண்டிப்பதற்கா? மக்களின் மேம்பட்ட வாழ்விற்கு பாடுபடாத இந்த காங்கிரஸ் அரசினை அரியணையிலிருந்து அகற்றிவிடுவது மக்களுக்கும் நாட்டிற்கும் நல்லது.
       பிரிவு 3(2)(பி) படி கடற்கரையில் பெட்ரோலியம் மற்றும் எரிபொருள்களை பாதுகாக்க இயக்குநகரம் கட்டவும், பெட்ரோலியத்தை பெறவும் இருப்பு வைக்கவும் அதற்குரிய கட்டிடங்களை கட்டவும் அனுமதியளிக்கிறது. மேலும் அமோனியம், பாஸ்பாரிக் அமிலம், கந்தகம், கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம் போன்றவற்றை கடற்கரை பகுதிகளில் இறக்கிவைத்து பாதுகாக்கவும் அதற்குரிய கட்டிடங்களை கடற்கரையில் கட்டவும் உத்தரவு பிறப்பிக்கிறது. இதன்மூலம் கடற்கரை பகுதிகளின் பெரும்பாலான பகுதிகளை கையகப்படுத்திடவும் அப்பகுதியிலிருக்கிற மீனவர்களை அப்புறப்படுத்திட மறைமுகமாக உதவியும் வழிவகையும் செய்கிறது.
       பிரிவு 3(4)படி கடற்கரை பகுதியிலுள்ள விடுதிகளிலிருந்தும் உணவகங்களிலிருந்தும் தொழிற்சாலைகளிலிருந்தும் வெளிவரும் கழிவுநீரை சுத்திகரித்து அந்நீரையும் கழிவுப்பொருள்களையும் கடலில் வெளியேற்ற அனுமதியளிக்கிறது. இது நீர் (மாசு கட்டுப்பாடு) சட்டம் - 1974 க்கு விரோதமானது எனத்தெரிந்தும் அச்சட்டத்தின்கீழ் அனுமதிபெற்று இதனை நிறைவேற்றுமென குறிப்பிடுகிறது. இதன்மூலம் மீனவர்களின் வாழ்வாதாரமான கடலம்மாவை அரசு சாக்கடைக் கிடங்காக கருதுகிறது என்பது தெளிவாக புலப்படுகிறது.. மீனவர்களின் தெய்வமான கடலம்மா வழிதெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறாள். அதனை நம்பி வாழ்ந்த மக்கள் காட்டாற்றில் இழுத்துச் செல்லப்பட்ட பிணமாக கரையொதுங்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பிரிவு 3(10)படி கடைகள், வீட்டு வளாகங்கள், உணவு விடுதிகள், வியபார வர்த்தகங்கள் போன்றவத்திற்கும் பொழுது போக்கிற்கும் கேளிக்கை செயல்களுக்கும் தாழ்வான கடற்கரைப்பகுதிகளை வெட்டி நிரப்பி அதில் கட்டிடங்கள் கட்டி பயன்படுத்த அனுமதியளிக்கிறது. யாருக்காக இவைகள் என்றால் கடல்புறத்தில் கள்ளக்காதலர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கொஞ்சிக் குலாவுவதற்கும் அவர்கள் காமப்பசி முடிந்து உடல்பசிக்கு தங்களது வயிறுகளை நிரப்பிக்கொள்வதற்கும்.
       இவ்வறிவிப்பாணை கடற்கரையிலுள்ள மணல் பாறைகளை கையகப்படுத்தி கனிமச் சுரங்கம் அமைக்கவும் நிலத்தடி பொருள்களான சுரங்கங்களை அமைக்கவும் வழிவகை செய்கிறது. கடற்கரை பகுதியில் அரிய ரக கனிமங்கள், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு வளங்கள் இருக்கிறதா என்பதனை ஆய்வு செய்து, அப்பகுதிகளை தன்னகப்படுத்தி கனிமங்களை வெளியே எடுக்க வேண்டுமென பிரிவு 3(11) கட்டளை பிறப்பிக்கிறது. இதன்மூலம் மீனவர் குடியிருக்கும் பகுதிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அப்பகுதியில் மேற்கண்ட ஏதாகிலும் ஒன்று இருந்தால் ஒட்டுமொத்த மீனவர்களையும் இரவோடு இரவாக உடனடியாக அப்புறப்படுத்தி அக்கிராமத்தை முழுவதுமாக தன்னகப்படுத்தும். அதனை பாதுகாக்கும் பொருட்டு அதிரடி படைகளை நியமிக்கும். காலங்காலமாக வாழ்ந்து வந்த மீனவர் ஒரேநாளில் குடும்பம் குடும்பமாக தங்களது குழந்தைகள், வீட்டுப் பொருள்களை எடுத்துக்கொண்டு தெருவில் அநாதையாக சென்றுவிட வேண்டும். இல்லையென்றால் அவர்களை நாயை அடிப்பதுபோன்று அடித்தோ அல்லது துப்பாக்கியால் சூட்டோ வெளியே விரட்டியடிக்கப்படுவார்கள்.
      பிரிவு 3(12)படி 200 மீட்டரிலிருந்து 500 மீட்டருக்கு இடைப்பட்ட பகுதியில் மீன் வளர்ப்பதற்கு அனுமதியளிக்கிறது. இது இன்னொரு வகையில் கடலில் மீன்பிடித்தது போதும் இனிமேல் நிலம் இருப்பவர்கள் குளம் அல்லது தொட்டி கட்டி மீன்பிடியுங்கள் என்பதாகும். அவ்வாறு மீன் வளர்க்கும்போது வாரத்திற்கு ஒருமுறை பழைய தண்ணீரை அப்புறப்படுத்தவும் புதிய தண்ணீரை உள்ளே புகுத்தவும் வேண்டியது அவசியமாகிறது. பழைய தண்ணீர் வெளியே கொட்டப்படும்போது அப்பகுதியிலுள்ள விவசாயம் முற்றிலும் பட்டுப்போகும். அப்பகுதிகளில் விவசாயம் பண்ணுவது குறித்து கனவிலும் கற்பனை செய்துகொள்ள முடியாத அளவிற்கு நிலம் பாழ்பட்டுப்போகும். இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.
      நிலத்தை மாசுபடுத்திவிட்டு பலகோடி பணத்தைச் செலவுசெய்து கடலைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு அனுமதியளிக்கிறது. கடல்நீரை குடிநீராக்கும் தனியார் நிறுவனங்கள் நீரை இலவசமாக நமக்கு விநியோகம் செய்யுமா என்றால் இல்லை. இன்றைக்கு பாக்கெட் பாலின் விலையை விட பாட்டில் தண்ணீரின் விலை அதிகமாகவேயுள்ளது. இதன்மூலம் மீனவர்கள் குடிதண்ணீரை விலைகொடுத்து வாங்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். மேலும் கடல் உயர கோட்டிலிருந்து 200 மீட்டர் தூரத்திற்குள் இருக்கும் நிலத்தடி நீரை எடுத்து கட்டுமானங்களுக்கு பயன்படுத்த வழிவகை செய்கிறது. இதன்மூலம் கடல்நீர் வெகு எளிதில் கடலோரமுள்ள விவசாயத்தை அழித்துப்போடும். இவையனைத்தையும் செய்துவிட்டு 200 மீட்டரிலுருந்து 500 மீட்டருக்குள் கிணறுகள் வெட்டவும் கைப்பம்புகள் அமைக்கவும் நமக்கு அனுமதியளிக்கப்படும் என்கிறது. இத்திட்டம் வேடிக்கையிலும் வேடிக்கையான கோமாளித்தனமான திட்டம்.
இந்திய அரசியல்வாதிகளின் மோசமான திட்டத்தால் இரண்டரை இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்ததுபோல் தற்கொலை செய்துகொள்கின்ற இனமல்ல மீனவ இனம். தங்களது உரிமைகள் பாதிக்கப்படும்போது அரசினை ஆவேசமாகத் தாக்கும் பீரங்கிகள்; போராளிகள். எனவே சட்டமானது மீனவனின் நலனில் அக்கறையும் பாதுகாப்பும் கொண்டதாக அமைய வேண்டுமேதவிர முதலாளிகளின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கு வழிவகுத்துவிடக்கூடாது. இல்லையென்றால் டெல்லி மத்திய அரசுக்கு சாவுமணி அடிக்கப்படும்; பாரத தேசம் துண்டுதுண்டாக சிதறுண்டு போகும்.
கோரிக்கைகள்:
1. 1991ஆம் வருட கடற்கரை ஒழுங்கமைவு மண்டல அறிக்கையை சட்டமாக்க வேண்டும்.
2.
கொள்ளை இலாபம் அடித்து மக்களைச் சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் கடற்கரைப்பகுதிகளை தாரைவார்ப்பதனை கைவிடவேண்டும்.
3.
மீனவர்களின் பாரம்பரிய உரிமையான கடலும் கடல்சார்ந்த பகுதியும் மீனவனுக்கு சொந்தமென அறிவிக்க வேண்டும்.